சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ஓராண்டு கால கடுமையான பயிற்சிக்குப் பிறகு ராயல் சல்யூட் மரியாதையுடன் இந்திய ராணுவத்தில் பாரம்பரிய முறைப்படி லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
நாட்டை காக்கும் சிப்பாய்கள் முதல், சிப்பாய்களுக்கு உத்தரவிடும் இராணுவத் தளபதி வரை பொறுப்புணர்வுடன் செயல்பட காரணம், நாட்டின் மீதான அவர்களின் சத்தியமே… அப்படி சென்னை இராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக் கொண்டு பயணிப்பவர்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக, SSC அதாவது குறுகிய கால பணிக்காக பயிற்சியானது சென்னை பரங்கிமலையில் உள்ள OTA வில் நடைபெற்று வந்ததை அடுத்து, செப்டம்பர் 5 ஆம் தேதி அவை நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, செப்டம்பர் 6ம் தேதி பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சாகச நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
ஜிம்னாஸ்டிக், இசைக் கலைஞர்களின் பேண்ட் நிகழ்ச்சி, களரியபட்டு, தற்காப்பு கலைகள், குதிரை அணிவகுப்பு மற்றும் எதிரிகளின் கூடாரங்கள் தகர்ப்பு என ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியும் மூத்த இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரின் முன்பும் அரங்கேற்றப்பட்டன.
இதனையடுத்து, செப்டம்பர் 7 ஆம் தேதியன்று பயிற்சி நிறைவு செய்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு பேரணி மற்றும் லெப்டினன்ட் பதவி பிரமாண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் இருந்து 258 ஆடவர், 39 மகளிர் மற்றும் மாலத்தீவு, தன்சானியா, பிலிப்பைன்ஸ், உகாண்டா போன்ற நட்பு நாடுகளில் இருந்து 10 ஆடவர் மற்றும் 5 மகளிர் அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.
பயிற்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட சாம்ரத் சிங்கிற்கு சிறப்பு வாள், சிம்ரன் சிங் ரதிக்கு ஓ டி ஏ தங்கப் பதக்கம், தனிஷ்கா தாமோதரனுக்கு வெள்ளிப் பதக்கம், தேவேஷ் சந்திர ஜோஷிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் பேசிய இந்திய இராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி, இளைஞர்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி பயில வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அணிவகுப்பு நிறைவை அடுத்து, பட்டயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்திய இராணுவ கலாச்சார பாரம்பரிய முறைப்படி, பதவி ஏற்க உள்ளவர்களின் தோள் பட்டையில் குத்தப்பட்டு இருக்கும் இரண்டு ஸ்டார்கள் கருப்பு பேட்ச் கொண்டு மூடப்பட்டிருக்கும்.
அந்த கருப்பு பேட்சை ஒவ்வொரு பயிற்சி அதிகாரியும், தங்களின் குடும்பத்தினர் முன்னிலையில் சென்று, அவர்கள் கைகளாலேயே கருப்பு பேட்சை அகற்றி, தற்போது தான் ஒரு லெப்டினன்ட் அதிகாரி என மார் தட்டி சொல்லிக் கொள்வதும், முதல் சல்யுட்டை தங்கள் பெற்றோர்களுக்கு செலுத்துவதும் வழக்கம்.
உற்சாகத்துடன் அவரவர் குடும்பத்தினரிடம் சென்ற பயிற்சி அதிகாரிகள் தங்களின் இரண்டு ஸ்டார் கொண்ட பட்டயங்களை தோள் பட்டையில் பொறுத்தி, லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பெற்றோருக்கு ராயல் சல்யூட் செலுத்திய பின்பு, மீண்டும் ஒன்று கூடி, இந்திய இராணுவத்தின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வை அடுத்து ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிலும் ஒருசில லெப்டினன்ட் அதிகாரிகள் தங்களது தலையில் உள்ள தொப்பியை, தங்கள். பெற்றோர் தலையில் அணிவித்து அழகு பார்த்ததும், அவர்களுக்கு சல்யூட் வைத்து பெருமை சேர்த்த காட்சிகளும், காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வை அடுத்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட லெப்டினன்ட் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவருக்கும் ராயல் சல்யூட் கொடுத்தனர். இறுதியாக இந்திய இராணுவத்தின் பாடலை பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
அனைவரும் ஒன்றாக இணைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி அகாடமியின் கமாண்டன்ட், லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் முன்னிலையில் புஷ் அப்ஸ் எடுத்தும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி அதிகாரிகளாக இருந்து லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுள்ள இந்த இளம் படையானது, 21 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பை மையமாக கொண்ட முப்படைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டு, தேசப்பணியை மேற்கொள்வார்கள்.