780 கோடி ரூபாய் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாத விவகாரத்தில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
160 ஏக்கர் 86 செண்ட் அளவிலான ரேஸ் கோர்ஸ் மைதானத்தை குத்தகை அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு தமிழக அரசு கடந்த 1946-ம் ஆண்டு வழங்கியது. வரும் 2044-ம் ஆண்டுடன் குத்தகைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான குத்தகை தொகை பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 780 கோடி ரூபாய் குத்தகை நிலுவைத்தொகையை செலுத்தாத ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சீல் வைக்குமாறு வருவாய்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனடிப்படையில், ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்வைப்பது குறித்த அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள், மைதானத்தை சுற்றியிருக்கும் நான்கு நுழைவு வாயில்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.