மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்தனர்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தேச ஒற்றுமை மற்றும் மகளிருக்கு அதிகாரமளிக்கும் விதமாக திகழ்ந்த அவரது எழுச்சியூட்டும் கவிதைகள், இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது கவிதைகள் மற்றும் பாடல்கள் வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுதினத்தையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசபக்தி பாடல்கள் மூலம் புரட்சி செய்த பாரதியாருக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அளித்து, பிரதமர் மோடி கௌரவித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மனதில் விடுதலை உணர்வை விதைத்த பாரதியாரின் நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குவதாகவும் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள் எக்ஸ் தளப்பதிவில், மகாகவியின் எழுத்துக்கள், கல்வி, பெண் சுதந்திரம், சமூக நீதி என சமூக சீர்திருத்தங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியதாக தெரிவித்துள்ளார்.
பாரதம் உலகின் குருவாக விளங்கும் என்ற அவரது விருப்பம் இன்று நிறைவேறிக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.