அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக நடிகர் அப்பாவு பேசியதாக கூறப்படுகிறது. இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபாநாயகர் அப்பாவு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, கடந்த 12ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன்வேஸ் இல்லத்திற்கு வழக்கு சம்பந்தப்பட்ட கடிதம் வந்ததாகவும், அதனை தாம் வாங்க மறுத்ததாகவும் தபால் துறை மூலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். தாம் கடிதம் வாங்க மறுத்ததாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும், இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.