தமிழகத்தில் ஏற்றுமதி நோக்கத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை கடந்த 2021-ஆம் ஆண்டில் மூடியது. அதேசமயம், வாகனங்களுக்கான உதிரி பாகம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
சென்னையிலும் ஃபோர்டு உற்பத்தி ஆலை மூடப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குமாறு அந்நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இதனை ஏற்று தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதி நோக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏறத்தாழ 3 ஆண்டுகள் கழித்து ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.