அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 18 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 7 ஆயிரத்து 616 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவைதான் என தெரிவித்துள்ள ராமதாஸ், இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க சென்றிருக்க தேவையில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அதிக முதலீடுகளை ஈர்த்து வந்ததை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், தமிழக முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வியடைந்துள்ளதாக பதிவிட்டுள்ள ராமதாஸ் வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.