ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
2017ம் ஆண்டு உருவாக்கிய தேசிய சுகாதாரக் கொள்கை அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில், கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்னும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்.
இது நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகும். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கும் குறைந்த விலையில் தரமான சுகாதார சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், இந்திய மக்கள் தொகையில் சுமார் 40 சதவீத மக்கள் அதாவது 55 கோடி பேர் பயனடைகிறார்கள்.
ஏழை மக்களுக்குத் தேவையான சிகிச்சை சரியாகக் கிடைப்பதை ஆயுஷ்மான் பாரத் உறுதி செய்கிறது. மேலும், இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
தொற்றாத நோய்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படுவதோடு, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகளும் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் இலவசமாகக் கிடைக்கிறது.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது குடும்பத்துக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடும் கிடைக்கிறது.
யார் எல்லாம் மருத்துவக் காப்பீட்டுக்குத் தகுதியானவர்கள் என்பதையும் இந்த திட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) , குறைந்த வருமானம் கொண்டவர்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தகுதி பெறுகிறார்கள்.
கிராமப்புறங்களில் வசிப்போரில், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள், யாசகம் பெறுவோர், குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளியைக் கொண்ட குடும்பம், தினசரி வேலை செய்யும் சொந்த நிலமற்ற குடும்பங்கள், பழங்குடி சமூகங்கள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டோர், ஒற்றை அறை கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
நகர்ப்புறங்களில் உள்ளவர்களில், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தொழிலாளர் பிரிவில் வந்த குடும்பங்கள், ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY) திட்டத்தில் பதிவு செய்துள்ள குடும்பங்கள் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு என ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 3,437 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப் பட்டுள்ளது.
இந்த திட்டச் செலவுகளில் 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும் என்றும், அதேசமயம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான 90 சதவீத செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உள்ளவர்களும், தனியார் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளவர்களும் இந்த திட்ட விரிவாக்கத்தால் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசாங்கம் இலவச சிகிச்சை அளிக்கும் என்று அறிவித்திருந்தார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான,உயர்தர சுகாதார சேவையை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், இந்தத் திட்டம் ஆறு கோடி குடிமக்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் வயதான குடிமக்களுக்கு, அவர்களின் நோய் சுமை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்ட விரிவாக்கம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைத்திருக்கிறது.