சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ஆயிரத்து 524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க செப்டம்பர் 11, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போலீசார் அனுமதி வழங்கியிருந்த நிலையில் முக்கிய தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளில் ஒரு பகுதி 11-ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டதையடுத்து இன்றும் அதிக எண்ணிக்கையில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டு கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் கரைக்கப்படுகின்றன. இதனையொட்டி 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்க் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.