இந்தியாவின் பன்முகத்தன்மை, செயல்திறன் உள்ளிட்ட அனைத்தும் தனித்துவமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர் மாநாடு மற்றும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடிக்கு மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநாட்டின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 60 ஆண்டுகளில் நாட்டு மக்கள் 3வது முறையாக ஒரு கட்சியை ஆட்சியமைக்க தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தார். 140 கோடி மக்களின் நம்பிக்கை உத்தரவாதமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவை உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக ஆக்குவதற்கான தீர்மானத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைய செய்வதற்கான செயல்திட்டத்தின் ஒருபகுதி தான் இந்த மாநாடு என சுட்டிக்காட்டினார்.