ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று மாலை 4.30 மணியளவில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கெஜ்ரிவால் அமைச்சரவையில் கல்வி, நிதி, வருவாய் மற்றும் சட்டம் என முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அதிஷி தன்வசம் வைத்திருந்தார். 43 வயதான அவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றபோது அவருக்கு பதிலாக அதிஷி அமைச்சரவையில் இடம்பெற்றார். அதிஷி அமைச்சராகி ஓராண்டே ஆன நிலையில், டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.