சென்னையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையை சேர்ந்த ரவுடி காக்காதோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, புளியந்தோப்பு பகுதியில் காக்காதோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பியோட முயற்சித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காக்காதோப்பு பாலாஜி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. காக்காதோப்பு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.