குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக படுகொலை முயற்சி நடந்துள்ளது. இதில், ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அமெரிக்க ரகசிய சேவையின் திறமைக்கு இது ஒரு சவாலாகவே பார்க்கப் படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூலை பென்சில்வேனியா பேரணியில், தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த முறை ட்ரம்புக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் நடந்திருக்கிறது.
ஏகே-47 ரக துப்பாக்கியுடன் ட்ரம்பை படுகொலை செய்ய புதர்களுக்குள் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை ரகசிய சேவை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புளோரிடாவில் உள்ள கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம், அடுத்த சில நிமிடங்களில், தப்பியோடிய ரியான் வெஸ்லி ரௌத் என்பவர், I-95 நெடுஞ்சாலையில் வைத்து துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு பைகள் மற்றும் GoPro கேமரா உட்பட சில பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதான 58 வயதான ரியான் வெஸ்லி ரௌத் மீது வட கரோலினாவில் பேராபத்தை விளைவிக்க ஆயுதத்தை எடுத்துச் செல்வது, கைது செய்யப்படுவதைத் தடுப்பது, ரத்தான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது, திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தால் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் ரௌத் அடிக்கடி பதிவிட்டு வந்திருப்பதும் ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான போரில் சேருவதற்கு ஆட்களை உக்ரைனுக்கு அனுப்பவும், அதற்கான நிதி திரட்டவும் பிரத்யேக வலைத்தளம் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க ரகசிய சேவை விரைவாகச் செயல்பட்டாலும், கடுமையான விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.
முன்னாள் அதிபரும் , குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப் போன்ற உயர்மட்ட நபர்களைப் பாதுகாப்பதில் அமெரிக்க ரகசிய சேவை எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.
படுகொலை முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள கணிதம் மற்றும் அறிவியலை உன்னிப்பாகப் பார்த்தால், ரகசிய சேவை அதிகாரிகளின் திகைப்பூட்டும் பணியின் சிக்கல்கள் தெரியவரும்.
இத்தகைய கொலையாளிகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பலதரப்பட்ட திசைகளில் இருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கக் கூடியதாக இருக்கும். முப்பரிமாண சூழலில், ஒரு கோள ஒருங்கிணைப்பு அமைப்பைப் பயன்படுத்தியே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
64,800 சாத்தியமான கோணங்களில் இருந்து தாக்குதல் வரலாம் என்றும், எந்த திசையிலிருந்தும் தாக்குதல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. இது ஒரு சவால் என்றால் , துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்களின் வேகம் ரகசிய சேவைக்கு இன்னொரு சவாலாகவே அமைந்திருக்கிறது.
பெரும்பாலான துப்பாக்கி தோட்டாக்கள் வினாடிக்கு அதிக பட்சம் வினாடிக்கு சுமார் 5,000 அடி வரையிலான வேகத்தில் செல்லக் கூடியவை. குறிப்பாக ஒரு 0.223 CALIBRE RIFFLE புல்லட் ஒரு வினாடிக்கு அதிக பட்சம் 4,000 அடி வேகத்தில் பறக்கும் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த வகை புல்லட் ஒரு முறை சுடப்பட்டால், எவ்வளவு திறமையான பயிற்சி பெற்ற ரகசிய சேவை அதிகாரிகளால் கூட அதை நிறுத்துவதற்கு சரியான நேரத்தில் செயல்பட முடியாது என்பதே உண்மை.
இதனால், படுகொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு அடுக்குகளை மட்டுமே அமெரிக்க ரகசிய சேவை நம்பியுள்ளது.
அனைத்து திட்டமிடல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க ரகசிய சேவை சாத்தியமான தாக்குதல் கோணங்களின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி முக்கிய நபர்களைத் தாக்க வரும் தோட்டாக்களைத் தடுக்க இயலாமல் போகிறது.
இத்தனை சவால்கள் நிறைந்த நிலையிலும், ரகசிய சேவை அதிகாரிகள்,தங்கள் பாதுகாப்பில் உள்ள நபர்களைப் பாதுகாப்பதில் எந்நேரமும் முழு கவனம் செலுத்துகிறார்கள் .
என்ன இருந்தாலும், ஏந்தியமர்ம நபர் ட்ரம்பின் சொந்த கோல்ஃப் மைதானத்திற்குள் நுழைந்து புதர்களுக்குள் ஏ கே 47 ரக அதிநவீன துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒளிந்திருக்க முடிகிறது என்றால் அமெரிக்காவின் ரகசிய சேவையின் மீதே அவநம்பிக்கை வந்துவிடும் என்றும், அச்சுறுத்தல் அளவுக்கு அதிகமாகவே உள்ளது என்றும் ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் அச்சுறுத்தல்கள் நிறைந்த ஆபத்தான தேர்தலாகி இருக்கிறது என்கிறார்கள் அமெரிக்க மக்கள்.