உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் H.ராஜா வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். புதிய உறுப்பினர்கள் சேர்த்த பின்பு அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : பாஜகவில் இதுவரை தேசிய அளவில் 3.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
அன்னபூர்ணா உரிமையாளர் நிதி அமைச்சரை தர்ம சங்கடப்படுத்தி விட்டேன் என்று அவரே ஒப்புக்கொண்டு, நேரிலும்,கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.அத்துடன் அந்த விஷயம் முடிந்து விட்டது.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து செல்வபெருந்தகை ஏன் போராட்டம் நடத்தவில்லை?
கடந்த 1967-க்கு பின்னர் காங்கிரஸின் ஆட்சி கவிழ்ப்பு கோட்பாட்டால் தான் மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதால், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு முறையாக நடைமுறைபடுத்தபடும்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு அமைச்சரா அல்லது விளையாட்டுக்கு அமைச்சாரா!? என்பது தெரியாமல் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது என்பது லேபிளை மாற்றுவது போல் தான். அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. அவர் ஒரு சனாதன தர்மத்தின் எதிரி.
திருமாவளவன் போட்டுள்ள மது ஒழிப்பு மாநாடு ஒரு வெட்க கேடான மாநாடு. அவர்கள் அமைத்துள்ள கமிட்டி, மத போதக கமிட்டி போல் உள்ளது,விஜய் அரசியலுக்கு வருவது திமுகவின் ஓட்டுகளை பகிர்ந்து கொள்ளவே என ஹெச். ராஜா கூறினார்.