வடலூர் வள்ளலார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் பெருவெளி நிலத்தில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது வள்ளலார் சர்வதேச மையத்திற்கு சொந்தமான 34 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை உரிமை கோரும் 269 பேரையும் எதிர்மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை மேற்கொள்ளவதுடன், நிலங்களை தனி நபர்களுக்கு விற்பனை செய்த கோயில் அறங்காவலர்கள், ஊழியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், பெருவெளி அருகே உள்ள 10 ஏக்கர் நிலத்தில் முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அக்டோபர் 2 ஆவது வாரத்தில் தொடங்க அறநிலையத் துறைக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.