அண்மை காலமாக இந்திய முதலீட்டாளர்கள் இடையே வெளிநாட்டு கோல்டன் விசாக்களை பெறுவதற்கான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோல்டன் விசா என்றால் என்ன, அதன் பயன் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்….
பிற நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பல்துறை கலைஞர்கள் போன்றோர் தங்கள் நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கோல்டன் விசாக்களை வழங்கி வருகின்றன.
கோல்டன் விசா வைத்துள்ளவர்கள், அதனை வழங்கிய நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பயணிக்க முடியும். மிக எளிமையாக தனது குடும்பத்தினரையும் உடன் அழைத்து செல்ல முடியும்.
மேலும், அந்நாடுகளில் நீண்ட காலம் வாழவும், தொழில் செய்யவும், உயர்க்கல்வி பயிலவும் கோல்டன் விசா உதவிகரமாக அமையும். முதலீட்டாளர்கள் மிக எளிதாக இந்த கோல்டன் விசாக்களை கோரி விண்ணப்பிக்க முடியும். அதற்கான விதிமுறைகள் நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற, அந்நாட்டில் 11 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் செய்தால் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற முடியும்.
சிங்கப்பூரில் கோல்டன் விசா பெற, அந்நாட்டில் 16 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசின் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க, அந்நாட்டில் 22 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த விசாவை பெற்று விட்டால், அந்நாட்டின் குடியுரிமையை பெறவும் தகுதிபெற முடியும்.
கனடா அரசு வழங்கும் கோல்டன் விசாவை பெற, அந்நாட்டின் சில குறிப்பிட்ட பத்திரங்களில் 7 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் செய்ய வேண்டும்.