சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடி கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வக பராமரிப்பின்மை குறித்தும் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த பள்ளியை ஆய்வு செய்து, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.