தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்தெந்த மாநகராட்சி, எவ்வளவு நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிற்கான மின் பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து 60 நாள்கள் வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின்வாரியம் வழங்கியுள்ளது.
ஒரு மாத மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் குடியிருப்புவாசிகளின் மின் இணைப்பை துண்டிக்கும் மின்வாரியம், 5 ஆயிரத்தி 69 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மின்வாரியம் சிக்கித் தவிப்பதாக கூறப்படும் நிலையில், அரசுத்துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக மின்வாரியத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டுமே சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணத்தொகை செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக ஈரோடு 950 கோடி ரூபாயும் சென்னை 936 கோடி ரூபாயும் மின்கட்டண பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி 857 கோடி ரூபாயும், வேலூர் 560 கோடி ரூபாயும், திருநெல்வேலி 511 கோடி ரூபாயும் நிலுவையில் வைத்துள்ளன.
மதுரை 483 கோடி ரூபாயும், விழுப்புரம் 402 கோடி ரூபாயும், கோயமுத்தூர் 370 கோடி ரூபாயும் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை,எளிய நடுத்தர குடும்பத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கீழ் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் மின்வாரியம் காட்டியிருக்கும் சலுகை பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் வரி, சொத்துவரி, சாலைவரி என பல்வேறு வரிகளை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த மறுப்பதாலும், அதனை முறையாக கேட்டுப்பெறாத மின்வாரியத்தினாலும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, மத்திய அரசிடம் பெற வேண்டிய மானியத் தொகையையும் பெற முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.