திமுகவை வளர்த்தெடுக்க பாடுபட்ட பலர் இன்னமும் தொண்டர்களாகவே இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதற்காக மட்டுமே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
2018 -ம் ஆண்டில் அரசியலுக்குள் வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த ஆண்டிலேயே கட்சியின் அதிகாரமிக்க பதவியான இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் சட்டமன்ற உறுப்பினரனார்.
திமுக ஆட்சியமைந்ததில் இருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் குடும்பத் தரப்பு தீவிரமாக வலியுறுத்தி வந்தாலும் கட்சியின் சீனியர்கள் அதனை விரும்பவில்லை என்பதால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
சட்டமன்ற உறுப்பினரான பின்பும் திரையுலகை விட்டு வெளிவராத உதயநிதி, அவ்வப்போது படங்களில் நடித்து வந்ததோடு, தயாரிப்பாளர் எனும் பெயரில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் புகார் எழுந்தது.
திரைத்துறையில் உதயநிதி ஸ்டாலின் செலுத்திய ஆதிக்கம், 2006 -2011 கருணாநிதி ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. அக்காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் கருணாநிதி குடும்பம் கைக்குள் வைத்திருந்ததும், அடுத்த வந்த தேர்தலில் ஆட்சியை இழக்க அதுவே முக்கிய காரணமாக இருந்ததையும் பலர் சுட்டிக்காட்ட சினிமாத்துறையில் இருந்து பெயரளவில் வெளியேறினார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்களான முத்துச்சாமி, ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் தொடங்கி, இளம் அமைச்சர்களான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பத் தொடங்கினர். அதன்படி கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதிக்கு சிறப்புத்திட்ட செயலாக்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற முக்கியதுறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அமைச்சராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கூட கடக்காத நிலையில் உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குரல் எழத் தொடங்கியது. உதயநிதியை துணைமுதல்வராக்க கோரிக்கை வைக்க வேண்டும் என பல மூத்த தலைவர்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
திமுகவை வளர்க்க பாடுபட்ட தலைவர்கள் பலர் காத்திருக்க கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டுமே மு.க.ஸ்டாலின் எவ்வாறு துணை முதலமைச்சராக முன்மொழியப்பட்டாரோ, அதைப் போலவே மு.க.ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலினை கட்சியிலும் ஆட்சியிலும் முன்னிலைப்படுத்துவது மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் காலத்திலும் தங்களின் குடும்பத்தினரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக துரைமுருகன் தொடங்கி, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு என மூத்த அமைச்சர்கள் பலர் தங்களின் வாரிசுகளை அரசியலுக்குள் கொண்டு வந்து எம்.பி, எம்.எல்,ஏ, மாவட்டச் செயலாளர்கள் என கிடைத்தவரை லாபமாக கருதி தங்களால் இயன்ற பதவியை பெறத் தொடங்கிவிட்டனர்.
.
திமுக உறுப்பினர், இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், விளையாட்டுத்துறை அமைச்சர் என அபரிதமாக வளர்ச்சியடைந்த உதயநிதிஸ்டாலினை துணைமுதலமைச்சராக்க முடிவு செய்திருப்பது திமுகவினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் வாரிசுக்கு துணைமுதலமைச்சர், அமைச்சர்களின் வாரிசுகளுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவி கிடைக்கும் போது தாங்கள் மட்டும் எக்காலத்திற்கும் தொண்டர்களாகவே இருக்க வேண்டுமா என்ற கேள்வியை திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.