இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயகே 39 புள்ளி 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.
இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாச 34 புள்ளி 28 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஆட்சியமைக்க எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்ப வாக்களிக்கலாம். முதல் சுற்றில் ஒருவேளை யாரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் வெற்றி பெறுபவர் அதிபராக பதவியேற்பார்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல்முறை என அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ரத்நாயகே தெரிவித்துள்ளார்.