ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.தொடர்ந்து, சீசிங் ராஜாவை சென்னை அழைத்துவந்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக நீலாங்கரைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவர், தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் சுட முயன்றதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்துள்ளார்.
இதில் சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி முன்கூட்டியே வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை காவல்துறையினர் கைது செய்யும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.