நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்றதும் மும்மடங்கு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை என்றும், வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை என்றும், புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கி செல்வதாகவும் கூறினார்.
2024-ம் ஆண்டு ஒட்டு மொத்த உலகிற்கும் முக்கியமானது என்றும், ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக பிரதமர் மோடியின் வருகையால் அமெரிக்க வாழ் தமிழர்கள் வேஷ்டி, சட்டை அணிந்து பறை இசை இசைத்து ஆனந்தமாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.