விலங்குகளின் கொழுப்பு கலந்த பிரசாதத்தை எடுத்து செல்லப்பட்டதற்கு பரிகாரமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் பக்தர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏழுமலையான் கோயிலுக்குள் விலங்குகளின் கொழுப்புகளை அறியாமல் கொண்டு சென்ற செயலால் ஏற்பட்ட அபச்சாரத்திற்கு பரிகாரம் காண கோயில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள் ஆகியோருடன் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை 6 மணிக்கு சாந்தி யாகம் நடைபெற்றது. யாக சாலை ஜீயர்கள், ஆகம சாஸ்திர நிபுணர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சியாமளா ராவ் மற்றும் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.