இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…..
தேசிய மக்கள் சக்தி எனும் ஜனதா விமுக்தி பெரமு இலங்கையில் செயல்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி.
அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்த கட்சி, தற்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்த கட்சியின் தலைவரான அனுரா குமார திசநாயகே, 1968ல் அனுராதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர்.
1987 முதலே ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1995ல் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த அவர், சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி. அமைச்சர்களுடன் அனுரா குமார திசநாயகே ராஜினாமா செய்தார். 2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறடா ஆகவும் இருந்தவர்.
2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்து அதன் வேட்பாளராக, அப்போது, நடந்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் வாக்குகளே மட்டுமே கிடைத்தன. தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகே வெற்றிவாகை சூடியுள்ளார்.