ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ,இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்தாவது:
“கடந்த 5 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த்தை தாண்டி இளைஞர்கள் செஸ் விளையாட்டில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் தற்போது இந்தியாவை சதுரங்கத்தில் முன்னோடியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்
என்னுடைய மாணவர்கள் தங்கம் வென்று இருப்பது மகிழ்ச்சி தருகிறது.குகேஷ் மற்றும் அர்ஜுன் ஏரிகேசி ஆகியோர் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக விளையாடி உள்ளனர்.
பிரக்கஞானந்தா இந்த தொடர் முழுவதுமாக இந்திய அணிக்கு, ராகுல் திராவிட் போல நிலைத்து நின்று விளையாடினார். கடந்த முறை மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஒலிம்பியாட் தொடரில் நடைபெற்றது போல கடைசி நேரத்தில் தங்கத்தை தவற விடாமல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஹாரிகா துரோணவள்ளி இந்திய செஸ் விளையாட்டில் பெண்களுக்கு மிகப்பெரிய உதாரணம். இந்திய செஸ் வளர்ச்சியை இனி இளைஞர்கள் முன்னோக்கி எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இரு அணிகளும் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் வென்று இருப்பது ரொம்ப சந்தோஷம் அளிக்கிறது” என ஆர்.பி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.