அதிக பணிச்சுமையால் இளம் ஆடிட்டர் மரணமடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணி தணிக்கை நிறுவனமாகக் கருதப்படும் ERNST & YOUNG-இல் கணக்கு தணிக்கையாளராகப் பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியன், கடந்த ஜூலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 26 வயது இளம்பெண் மாரடைப்பால் மரணமடைவது சாதாரண விஷயம் அல்ல.
மார்ச் மாதம் பணியில் சேர்ந்த அன்னா, நான்கே மாதங்களில் உயிரிழக்க பணிச்சுமையே காரணம் என்று கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் அன்னா செபாஸ்டியன்.
அவரது உயிரிழப்பு தொடர்பாக EY நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மெமானிக்கு அன்னாவின் தாய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “அன்னாவின் முதல் பணி இது. ஆனால் 4 மாதங்களிலேயே பணிச்சுமையால் உயிரிழந்துவிட்டார்.
அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேலாளருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது குழந்தையின் உயிரிழப்பு நிறுவனத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என, தமது வேதனையைத் தெரிவித்திருந்தார்.
அந்தக் கடிதம் இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அதற்கு ராஜீவ் மெமானி பதிலளித்தார். ”இதுபோன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். ஒரு தந்தையாக அவர்களின் துயரத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றாலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்துகிறேன். இது நமது கலாசாரத்திற்கு எதிரானது. இதற்குமுன் இவ்வாறு நடந்ததில்லை. இனி ஒருபோதும் நடக்காது. EY நிறுவனத்தில் ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அன்னா செபாஸ்டியனின் பெற்றோர் தெரிவித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என அன்னாவின் தந்தை சிபி ஜோசப்பும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரும் வலியுறுத்தியுள்ளனர். ப
ணி நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்றும், ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம் என்று வரைமுறைப்படுத்த வேண்டும் என சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.