ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது போலி என்கவுன்ட்டர் என்கிறார் சீசிங் ராஜாவின் மனைவி. தற்காப்புக்காக சுட்டோம் என்கிறது போலீஸ். உண்மையில் நடந்தது என்ன?
கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க பேசும் இவர் ரவுடி சீசிங் ராஜாவின் மனைவி. தமது கணவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப் போகிறது என்று அவர் கூறிய சில மணி நேரங்களிலேயே காவல்துறையின் துப்பாக்கிகள் வெடித்துவிட்டன. அதுபற்றி கேட்டால் “யாரை கைது செய்தாலும் உறவினர்களை வைத்து இவ்வாறு வீடியோ வெளியிடுவது அண்மைக்கால வழக்கம். ஆனால் இதற்கும் தங்களின் நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை” என்கிறது போலீஸ். இதே போல், முதலில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதையும் மறுத்திருக்கிறது காவல்துறை.
யார் இந்த சீசிங் ராஜா? ஆம்ஸ்ட்ராங்க் கொலையோடு இவர் தொடர்புபடுத்தப்பட்டது ஏன்? நீலாங்கரை அருகே நிஜத்தில் என்ன நடந்தது?
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மன் – அங்கம்மா தம்பதியின் மகன் ராஜா. கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்த இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்காப்பு கலையான கராத்தேவை கற்றுக் கொண்ட ராஜா, அதை தமது நண்பர்களுக்காக பயன்படுத்த தொடங்கினார். கராத்தே மாஸ்டரான அவர் சிறு, சிறு சண்டைகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபட தொடங்கினார்.
வாகனங்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த ராஜா, சரியாக தவணை கட்டாதவர்களின் வண்டிகளை அடவாடியாக பறிமுதல் செய்தார். அதன்மூலம் சாதாரண ராஜாவாக இருந்த அவர் ‘சீசிங்’ ராஜாவாக மாறினார். தாம்பரம் மார்க்கெட்டைச் சேர்ந்த ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, மாமூல் வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார். ரியல் எஸ்டேட்டிலும் கால்பதித்த அவர், வண்டிகளைப் போலவே நிலங்களையும் அடித்துப் பறிக்கத் தொடங்கினார்.
இப்படி படிப்படியாக ரவுடியான அவர் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக மாறினார். ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறுகிறது காவல்துறை. அதில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக வேளச்சேரி காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கும் ஒன்று. அதையும் சேர்த்து மேலும் சில வழக்குகளிலும் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார் ராஜா. அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம் தரப்படும் என அண்மையில் காவல்துறை போஸ்டர் ஒட்டியது.
எட்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவும் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷும் நண்பர்கள். அதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படையினர் வேளச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கு தொடர்பாக அவரிடம் வேளச்சேரி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது குறிப்பிட்ட துப்பாக்கியை நீலாங்கரைக்கு அருகேயுள்ள அக்கரை என்னுமிடத்தில் மறைத்து வைத்திருப்பதாக ராஜா கூறியதாவும் அதை கைப்பற்றுவதற்காக அவரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை சொல்கிறது.
முதலில் இரண்டு இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்களுக்கு போக்கு காட்டியதாகவும் மூன்றாவதாக அக்கரைக்கு கூட்டிச்சென்றதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. அங்கு புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி இரண்டு முறை ராஜா சுட்டதாகவும் அதனால் வேறு வழியின்றி தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல், சீசிங் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி பேட்டி அளித்த காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தியிடம், “தம்மை காவல்துறை தீவிரமாக தேடுகிறது எனத்தெரிந்தும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து சீசிங் ராஜா பணம் பறித்தாரா?”, “இதுபோன்ற பெரிய குற்றவாளிகளை கைவிலங்கிட்டுத்தானே காவல்துறை அழைத்துச் செல்லும்?, அப்படியிருக்கையில் அவர் திடீரென தாக்குதல் நடத்தியது எப்படி?” என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர் சற்று மழுப்பலாகவே பதிலளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதன் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா என மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் காவல்துறை சொல்லும் ஒரே காரணம் தற்காப்பு நடவடிக்கை என்பதே. பொதுவாக என்கவுன்ட்டர் நடந்தால் காவல்துறை இப்படித்தான் சொல்லும் என்றாலும் அது எப்படி எல்லா ரவுடிகளும் ஒரே மாதிரி போலீஸை தாக்கிவிட்டு தப்பியோட பார்க்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.