முடா ஊழல் வழக்கில் ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமைய்யா தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மூடா முறைகேடு குறித்து முதலமைச்சர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.
ஆளுநரின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி முதலமைச்சர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமனற்த்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும், கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், முடா ஊழல் வழக்கில் ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமைய்யா தொடர்ந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முடா ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சரிடம் விசாரணையை தொடரலாம் எனவும் நீதிபதி நாநபிரசன்னா தீர்ப்பு அளித்துள்ளார்.