பெங்களூருவில் கொலை செய்யப்பட்டு , துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளிர்சாதன பெட்டியில் இளம்பெண் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் ஒரு படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்பில், தனது கணவரைப் பிரிந்து தனியாக 29 வயதான மகாலக்ஷ்மி என்ற பெண் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மகாலக்ஷ்மி தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த மகாலட்சுமியின் தாயார் மீனா ராணாவுக்கும்,சகோதரிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் புழுக்கள் நிறைந்த நிலையில் மகாலக்ஷ்மியின் உடல் 59 துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையான மகாலட்சுமிக்கும், ஹேமந்த் என்பவருக்கும் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 9 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே, தனது மனைவி மகாலட்சுமிக்கு முடிதிருத்தும் கடையில் வெளி பார்க்கும் உத்தர காண்ட்டை சேர்ந்த அஷ்ரஃப் என்பவருடன் உடன் பழக்கம் இருந்ததாகவும் , மகாலக்ஷ்மி கொலையின் பின்னணியில் அவர் இருக்கலாம் என்றும் ஹேமந்த் தாஸ் விசாரணையில் தன் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.
மேலும் , கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரஃப் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் அடிப்படையில்,அஷ்ரஃப்பை பெங்களூரு வரக்கூடாது என்று காவல் துறையினர் உத்தரவிட்டதாகவும், அதன் பின் அஷ்ரஃப் எங்கு சென்றார் என்று தமக்கு தெரியாது என்றும் விசாரணையில் ஹேமந்த் தெரிவித்திருக்கிறார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், தற்போது கொலையாளி மேற்கு வங்கத்தில் மறைந்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சில குழுக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு காவல் துறை ஆணையர் தயானந்தா தெரிவித்திருக்கிறார்.
மகாலட்சுமியின் கொடூரக் கொலைக்கு அவரது குடும்பத்தினர் நியாயம் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், கொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யுமாறு பெங்களூரு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் முழுமையான மற்றும் காலக்கெடுவுக்கான விசாரணையை உறுதிப்படுத்துமாறும், மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், பெங்களூரு காவல் துறையைக் தேசிய மகளிரை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மகாலக்ஷ்மி கொலை தொடர்பாககாவல் துறையினர் பல தகவல்களை சேகரித்துள்ளதாகவும், அவற்றை தற்போது வெளியிட முடியாது என்று கூறியுள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் பிடிப்போம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கூறிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், பெண்கள் அதிகம் செல்லும் இடங்களில் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சூழலில், அஷ்ரஃப், மகாலட்சுமியைக் கொடூரமாகக் கொன்றதன் மூலம் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் கன்னடர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை தெளிவாக நினைவூட்டுவதாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.