கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் சென்றுவிட்டு வேன் மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் பயணித்த மீதமுள்ள 14 பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இரவு நேர பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தவிர்க்க முடியாத தருணங்களில் தொடர்வண்டி, பேருந்து ஆகியவற்றில் பொதுமக்கள் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.