கல்வியறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் பின்தங்கிய நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 29.9 சதவீதத்தினர் வேலையின்றி இருக்கும் தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேரளாவில் 47.1 சதவீத பெண்களும், 19.3 சதவீத ஆண்களும் வேலையின்மை பிரச்னையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் 36.2 சதவீத வேலையின்மை வீதத்துடன் லட்சத்தீவு முதலிடம் வகிக்கிறது.
அங்கு 79.7 சதவீத பெண்களும், 26.2 சதவீத ஆண்களும் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக அந்தமான் நிகோபார் தீவில் 33.6 சதவீதம் பேர் வேலையின்றி இருக்கின்றனர். வேலையின்மை பிரச்னையை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத்தும் மத்திய பிரதேசமும் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.