சேலத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த பிரபல ரவுடியை நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் என்பவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
பின்னர் தனது மனைவியுடன் காரில் அவர் வீடு திரும்பி முயன்ற நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்தே போலீசார் அவரை குண்டுகட்டாக கைது செய்தனர். மேலும், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினசரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபகாலமாக பிரபல ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய கணவரை என்கவுன்ட்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருக்கலாம் என ஜானின் மனைவி சந்தேகம் தெரிவித்துள்ளார்.