471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தமிழக அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
2023-ம் ஆண்டு செந்தில்பாலாஜிக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
2011-2016 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கு சென்னை எம்பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
செந்தில்பாலாஜியின் இலாக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்தார்.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
தம் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்ததார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவில் முடிவு எட்டப்படும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்து விடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்தார்.
சிறப்பு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அமலாக்கதுறை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி மனுக்கள் மேல் மனுக்களை தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், ஜாமீன் கோரியும் சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் இதுவரை 59 முறை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தது.
471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.