நாமக்கல் அருகே தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கண்டெய்னர் லாரியில் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படையில் இன்று அதிவேகமாக கண்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளி விட்டு சென்றுள்ளது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் சேலம் மாவட்ட முக்கிய சாலைகளை சுற்றி வளைத்தனர். பின்னர் சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டியில் வைத்து அந்த லாரியை மடக்கினர்.
அப்போது அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் வட இந்திய கொள்ளையர்களை நோக்கி சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து உள்ள 7 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்.
அந்த கண்டெய்னர் லாரியில் ஒரு கார் மற்றும் கட்டுகட்டாக பணம் இருந்துள்ளது. காரில் சென்று கொள்ளையடித்த பின்னர் காரை கண்டெய்னருக்குள் ஏற்றி மறைத்து தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.