முன்னாள் அமைச்சர் ஒருவரின் கல்லூரி வளாகத்தில் கிணறு தோண்டுவதாக கூறிக் கொண்டு, குவாரிக்கு இணையாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு வெடிகளை வைத்து பாறைகளை தகர்க்கும் போது, சிதறும் கற்கள் அருகே உள்ள வீடுகள் மீது விழுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கல் குவாரியோ…. கிணறோ…… இப்படி வெட்டப்படும் இடத்தில் இருந்து கற்கள் சிதறுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னத்தூர் கிராமத்தின் அருகே அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான தம்பிதுரைக்கு சொந்தமாக இந்தக் கல்லூரிகளின் வளாகத்தில்தான் எந்நேரமும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் தண்ணீருக்காக ஒப்பந்ததாரர் மூலம் கிணறு வெட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது அதிக அளவிலான மருந்துகளை நிரப்பிய வெடிகள் மூலம் பாறைகள் தகர்ப்படுகின்றன்.
அந்த பாறைகள் வெடிக்கும் போது அதில் இருந்து சிதறும், பெரிய கற்கள் அருகே உள்ள விவசாய நிலங்களில் சரமாரியாக விழுகின்றன. இதனால் பயிர்கள் சேதமடைகின்றன. கற்கள் வெடி வைத்து தகர்ப்படுவதால் வீடுகளிலும் விரிசல் ஏற்படலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாய வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் உயிர் பயத்தில் விவசாயிகள் வேலைக்கே வருவதில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள், வீடுகள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்றும் பதற்றத்துடன் கூறுகின்றனர்.
வெடி வைத்து தகர்க்கப்படும் கற்கள் வீடுகளின் மீது விழுவதால் அப்பகுதி சிறுவர், சிறுமிகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் வீடுகளின் மீது கல் விழுமோ என்ற அச்சத்தில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர், அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான கல்லூரியில் கிணறு வெட்டுவதாகக் கூறுகிறார்கள்…. ஆனால் வெட்டுவது கிணறு அல்ல… குவாரிதான் வெட்டுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிக்கு வைக்கும் வெடிமருந்து அளவை விட 10 மடங்கு அதிகமாக வைத்து வெடிக்கச் செய்கிறார்கள் எனவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குமுறல் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.