தமிழகத்தில் குடும்பத்தினருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு டாஸ்மாக் மூலம் 15 ஆயிரம் ரூபாய் திமுக அரசு வசூல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு கருணாநிதி புகழ் பாட நேரம் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகளை மறந்துவிட்டனர். அதிமுக ஆட்சி காலத்தின்போது செந்தில்பாலாஜி குறித்து ஆள்கடத்தல் செய்பவர், செந்தில்பாலாஜி ஒரு சீட்டிங், பிராடு என விமர்சித்த ஸ்டாலின் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரை தியாகி என கூறுவது எவ்வளவு வெக்ககேடான விஷயம் என்பதை தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர்.
திமுக அரசு சாராய வருமானத்திலேயே குறியாக உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போன முத்துசாமி தற்போது தமிழக மக்களிடம் குடியை விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை சுமார் 3 ஆயிரம் மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் சம்பாதித்த பணத்தை இதுபோன்ற பார்களில் செலவு செய்கின்றனர். இதன் மூலம் ஒரு குடும்பம் வாயிலாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது என ஜெயக்குமார் தெரிவித்தார்.