நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் விடுதி உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு கோடநாடு வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு தன்னை மிரட்டியதாக, கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வாளையார் மனோஜ் மற்றும் சயான் மீது தனியார் விடுதி உரிமையாளர் சாந்தா குமாரி புகாரளித்தார்.
இதனைத்தொடர்ந்து சாந்தா குமாரி அளித்த புகாரின்பேரில் அக்டோபர் 16-ஆம் தேதி உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனியார் விடுதி உரிமையாளர் சாந்தகுமாரி 14வது முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.