ஏடிஎம் கொள்ளையர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததால், இனி தமிழகம் பக்கம் வர வடமாநில கொள்ளையர்கள் அஞ்சுவார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடஅவர் கூறியதாவது :
ஏடிஎம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏற்கனவே காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்தோம். அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுப்பது தங்களது உயிரையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் எடுக்கின்றனர். தற்போது நடந்துள்ள சம்பவம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயத்தையும் இனி தமிழகம் பக்கமே போக கூடாது என கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்.
இந்த சம்பவத்தில் தைரியமாக முடிவு எடுத்து தானே முன் நின்று காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கிய நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
ரவுடிகள், கொள்ளையர்கள், கூலிப்படையினர் தங்களை காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்துவார்கள். இது போன்ற தாக்குதலில் காவல்துறையினர் உயிரிழப்பு ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது. அப்போது தான் காவல்துறையினர் தங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க என்கவுண்டரில் ஈடுபடுகின்றனர் என சைலேந்திரபாபு தெரிவித்தார்.