லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். யார் இந்த ஹசன் நஸ்ரல்லா ? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரலாற்றில் இதுவரை எதிர்கொண்ட தாக்குதல்களில் இது மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதல்களை லெபனான் சந்தித்து வருகிறது. இதற்கு யார் காரணம் என்றால், அதற்கு உலகமே கை காட்டும் நபர் தான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரை தளத்தில் ஹசன் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து, இஸ்ரேல் ராணுவம், துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஹிஸ்புல்லா தலைமையகத்தின் மீதும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை எஃப்-35 ரகப் போர் விமானங்கள் மூலம் நடத்தியது. 4 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட, நிலத்தின் கீழ் சென்று தாக்கும் 8 வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது என்று இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேல் தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் ஹெர்சி ஹாலேவி, இஸ்ரேலையும் அதன் குடிமக்களையும் அச்சுறுத்தும் யாரையும் விடமாட்டோம் என்றும், இது முடிவல்ல தொடக்கம் என்றும், தெரிவித்துள்ளார்.
மேலும்,ஒரு தனி அறிக்கையில், நஸ்ரல்லாவுடன், அவரது மகள் ஜைனப் நஸ்ரல்லா, தெற்கு முன்னணி என்று அழைக்கப்படும் ஹிஸ்புல்லா தளபதி அலி கராக்கி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹிஸ்புல்லா தீவிரவாதத்தைத் தேர்வு செய்யும் வரை இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்றும், இஸ்ரேல் மீதான அச்சுறுத்தலை எதிர்க்க எல்லா வழிகளிலும் தாக்குதல் தொடரும் என்று பேசிய, சில மணி நேரங்களில்,ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனானின் ஷியா இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான செல்வாக்கு மிக்க மனிதராவார். எந்நேரமும், படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக,பல ஆண்டுகளாக பொது வெளியில், தலைகாட்டாமல் இருந்து வந்தார் ஹசன் நஸ்ரல்லா.
ஹிஸ்புல்லா இயக்கம் நஸ்ரல்லா தலைமையின் கீழ், ஹமாஸ், இராக், சிரியா மற்றும் ஏமனில் உள்ள ஹூதி போன்ற தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்ததும் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்த, ஈரானிடம் இருந்து ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றதும்,உலக அளவில் தீவிரவாதத்தைப் பரப்பியதும் தான் ஹசன் நஸ்ரல்லாவின் முக்கிய பணிகளாகும் .
இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விடவும் வலிமையான தீவிரவாத படையாக மாற்றிக் காட்டியவர் நஸ்ரல்லா. 1960ம் ஆண்டு, லெபனானில், பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில்,சாதாரண காய்கறி விற்கும் கூலி தொழிலாளிக்கு மகனாக ஹசன் நஸ்ரல்லா பிறந்தார்.
லெபனானின் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு, 1975ம் ஆண்டில் ஷியா இஸ்லாமிய போராளிகள் குழுவில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டு, லெபனானை இஸ்ரேல் கைப்பற்றியது.
அப்போது, லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தளமாகக் கொண்டு புதிய தீவிரவாத குழு உருவானது. இரானின் புரட்சிகர காவலர்களிடமிருந்து கணிசமான ராணுவ ஆதரவையும் பெற்ற நிலையில், இந்த குழுவே ஹிஸ்புல்லாவாக உருவெடுத்தது.
1985ம் ஆண்டில், தனது இருப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹிஸ்புல்லா அமெரிக்காவையும் அன்றைய சோவியத் யூனியனையும் இஸ்லாத்தின் பிரதான எதிரிகளாக அடையாளப்படுத்தியது. மேலும், இஸ்லாமிய நாட்டின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்காக இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக ஹிஸ்புல்லா அறிவித்தது.
ஹிஸ்புல்லாவில், படிப்படியாக வளர்ந்த ஹசன் நஸ்ரல்லா, பெய்ரூட் பகுதிக்கான தலைவரானார். இஸ்ரேல் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,1992ஆம் ஆண்டு தனது 32வது வயதில் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரானார் ஹசன் நஸ்ரல்லா.
முசாவி கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பது தான் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது. வடக்கு இஸ்ரேலில் தாக்குதல், துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் கார் குண்டு வெடிப்பு,
அர்ஜென்டினாவில் இஸ்ரேல் தூதரகத்தில் தற்கொலைபடை தாக்குதல்,தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளுடன் போர், என ஹசன் நஸ்ரல்லா,இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் ஏராளம்.
2000ம் ஆண்டு நடந்த போரில், இஸ்ரேல் ராணுவம் பின்வாங்கியதை, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றி என நஸ்ரல்லா அறிவித்தார். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, எல்லை தாண்டிய தாக்குதல்களை ஹசன் நஸ்ரல்லா முன்னெடுத்தார். சிரியாவின் போருக்குள் லெபனானையும் ஹசன் நஸ்ரல்லா இழுத்துச் சென்றார். இதன் விளைவாக, லெபனானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவும், இஸ்ரேல் மீது ஏவுகணைகள் செலுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியது.
8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மற்றும் கோலன் குன்றுகள் மீது ஏவியதும், பீரங்கிகளைத் தாக்கும் சிறப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் கவச வாகனங்கள் மீது வீசியதும் மற்றும் டிரோன்கள் மூலம் இஸ்ரேல் ராணுவ இலக்குகளைத் தாக்கியதும், ஹசன் நஸ்ரல்லாவின் தீவிரவாத செயல்களாகும். இதற்கு பதிலடியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக்கியது .
32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார். மேலும், உலகமெங்கும் ஆயிரக்கணக்கான தீவிரவாத நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஹசன் நஸ்ரல்லா என்று இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் சிவப்புக் கோட்டை இஸ்ரேல் கடந்து செல்கிறது என்று கூறியுள்ள ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் அலி லரிஜானி, ஹிஸ்புல்லாவின் தலைவரைக் கொல்வதால், ஹிஸ்புல்லாவை அழித்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அபார வெற்றியை பெற்றுள்ளதாகவே சர்வதேச நாடுகள் பார்க்கின்றன.