இன்னும் இரண்டு மாதங்களுக்கு அற்புதமான வானியல் நிகழ்வு நடக்க இருக்கிறது. பூமிக்கு இரண்டாவது நிலவு வரப்போகிறது. பூமியின் தற்காலிக நிலவு பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
35,000-க்கும் மேற்பட்ட விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை பூமிக்கு அருகே சுற்றி வருகின்றன என அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ கண்டுள்ளது. அவற்றின் சுற்றுப்பாதை மற்றும் பூமிக்கு அருகில் அவை வரும் காலம் ஆகியவற்றை துல்லியமாக கணித்து வெளியிட்டு வருகிறது, நாசாவின் ‘ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ எனும் வானியல் அமைப்பு.
அதன்படி சென்ற ஆகஸ்ட் 7ம் தேதி, 37 அடி விட்டமுடைய அர்ஜுனா விண்கல் குடும்பத்தைச் சேர்ந்த ‘2024 பி.டி.5’ என்ற விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எப்போதுமே, பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் போன்றவற்றை ஈர்த்து, அவற்றை தற்காலிகமாக தனக்கான சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.
அதன்படி ‘2024 பி.டி.5’ விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை, பூமிக்கு 34 லட்சம் கிலோமீட்டர் துாரத்தில், மணிக்கு 3540 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் இரண்டாவது நிலவாக பூமியை சுற்றி வரும்.
பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, மீண்டும் தன் ‘அர்ஜுனா’ விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கே சென்று விடும் என்று என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு தற்காலிக மினி நிலவாக வரும் இந்த விண்கல்லை, வெறும் கண்களாலோ அல்லது சாதாரண தொலைநோக்கிகள் மூலமாகவோ பார்க்க முடியாது என்றாலும், தொழில்முறை தொலைநோக்கிகள் மூலம் பார்க்கக் கூடிய இந்த விண்கல், நட்சத்திரங்களுக்கு இடையே மிக வேகமாக நகர்ந்து செல்வதை ஆன்லைனில் பார்க்க முடியும் என்று வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட்கூறியுள்ளார்.
2024 PT5, வரும் நவம்பர் 25 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறினாலும், 2055 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மீண்டும் சில நாட்களுக்குப் பூமியின் ‘இரண்டாவது நிலவாக’ திரும்பும் என்றும், அதன் பின்னர் 2084ம் ஆண்டின் தொடக்கத்தில், மீண்டும் சில வாரங்களுக்குப் பூமியின் ‘இரண்டாவது நிலவாக’ திரும்பும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
மிக சிறிய அளவிலான இந்த தற்காலிக நிலவு, பூமியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் பயப்பட தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எந்நேரமும் சுறுசுறுப்பாக உள்ள சூரிய குடும்பத்தில், இந்த சிறுகோள், இந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உள்ளன என்றும், தொடர்ந்து கண்காணித்து அனைத்தையும் கண்டுபிடிக்கும் முக்கியத்துவத்தை இந்த தற்காலிக நிலவு எடுத்துக்காட்டுகிறது என்று வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட் தெரிவித்திருக்கிறார்.