துபாயைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு அளித்த பரிசு, ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யார் அவர், அப்படி என்ன பரிசை வழங்கினார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!
பொதுவாக மனைவியிடம் காதலை வெளிப்படுத்த கணவன்மார்கள் என்னென்ன பரிசுகளை வாங்கி தருவார்கள் என்று பார்த்தால், மல்லிகைப்பூ, ரோஜா, விலை உயர்ந்த உடைகள் தொடங்கி, தங்க நகை, வைர மோதிரம் என அந்த பட்டியல் நீளும்.
ஆனால், Out Of Box-ல் யோசித்த துபாயை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு தனித்தீவு ஒன்றையே வாங்கி கொடுத்து, அவரது மனைவியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
துபாயில் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர் ஜமால் அல் நடாக். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த சௌதி என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஜமால் அல் நடாக் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். ஆனால், குடும்ப தொழிலை பார்த்துக்கொள்வது, தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது எல்லாம் சௌதி அல் நடாக்கிற்கு இரண்டாம் பட்ச வேலைதான். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதும், அதனை காண்பித்து தனது மனைவியை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதும்தான் அவரது முழுநேர வேலை.
தனது மனைவியை surprise செய்ய பல கோடி ரூபாய்களை அவர் செலவிட்டுள்ளார். ஒருமுறை தனது மனைவிக்காக மோதிரம் ஒன்றை வாங்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அந்த முடிவு அவரது நண்பர்கள் அனைவரையும் வாய்பிளக்க செய்தது. காரணம், அந்த மோதிரத்தின் விலை, ஒரு மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் கூறவேண்டும் என்றால், சுமார் 8 கோடி ரூபாய்.
மற்றொரு முறை அரிய கலைப்படைப்புளை வாங்கலாம் என ஜமால் அல் நடாக் நினைத்தார். அதற்காக அவர் ஒதுக்கிய தொகை, 17 கோடி ரூபாய்.
இப்படி, வளைத்து வளைத்து பொருட்களை ஷாப்பிங் செய்வதிலும், தனது மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதிலும் அவருக்கு அலாதி இன்பம்.
கோடி ரூபாய் என்பதெல்லாம் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் உழைப்பு. ஆனால், ஜமால் அல் நடாக்கிற்கு அந்த தொகை வெறும் pocket money-தான்.
தொழிலதிபர் ஜமால் அல் நடாக், அண்மையில் தனது மனைவிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த பரிசை பார்த்த பெரும்பாலான கணவர்கள் நெஞ்சை பிடித்து விட்டனர். காரணம், ஜமால் அல் நடாக் தனது மனைவி குளிப்பதற்காக தனித்தீவு ஒன்றையே வாங்கிக்கொடுத்துள்ளார். இந்த தீவின் மதிப்பு இந்திய ரூபாயில் 418 கோடி ரூபாய். தனது மனைவி பிகினி உடை அணிந்தபடி தனிமையில் ஆனந்தமாக குளிக்க ஏதுவாக இந்த தீவை வாங்கியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தீவு எங்கே உள்ளது என்ற தகவலை சௌதி அல் நடாக் வெளியிடவில்லை. இந்த தீவு தொடர்பாக அவரது மனைவி வெளியிட்ட வீடியோ, இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது.
ஜமால் அல் நடாக்கின் இந்த செயலை பலர் விமர்சித்தும் வருகின்றனர். “காதலை வெளிப்படுத்த பலருக்கு ஒற்றை ரோஜாவே போதும். ஆனால், சிலருக்கு மட்டும் காதலை நிரூபிக்க தனித்தீவு தேவைப்படுகிறது.” என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், “பெண்கள் பாதுகாப்பாக குளிக்க முடியாத நிலையில்தான் துபாய் கடற்கரைகள் உள்ளதா?. தனித்தீவில் குளித்தால் மட்டும்தான் அங்கு பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
எது எப்படி இருந்தாலும், மனைவி குளிக்க தனித்தீவு வாங்கியதன் மூலம் வரலாற்றிலும், பல பெண்களின் மனதிலும் இடம்படித்து விட்டார் ஜமால் அல் நடாக். காதலை வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய உயரத்தையும் அவர் நிர்ணயித்து விட்டார். அந்த உயரத்தை தாண்ட போகும் அடுத்த பணக்கார கணவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.