காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மகாத்மாவின் பெயரே எழுத்துப் பிழையுடன் இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யர்மலையில் திறக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் தான் இருக்கின்றன.
சுமார் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டடத்தை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், திறந்து வைத்தார். இங்கு கல்வி பயில வரும் மழலையர்கள் கற்பதற்காக சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களின் மேல் இருந்த தமிழ் வார்த்தைகளில் எண்ணிலடங்கா பிழைகள் இருந்தது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தமிழில் அரிச்சுவடி கற்றுக் கொள்ள வரும் மழலையர்கள், இங்கு பயின்றால், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு பிழைகள் இருந்தன. தேசத் தலைவர்கள், தமிழ் மாதங்கள், பழங்களின் பெயர்கள் என அனைத்திலும் ஏதாவது ஒரு எழுத்துப் பிழை இருந்தது…..
தமிழ் வார்த்தைகளில் மட்டுமின்றி, ஆங்கில வார்த்தைகளிலும் இதேபோன்று பிழைகள் இருந்தது, அந்த பணியை செய்தவர்களின் கல்வியறிவை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது.
உச்சகட்டமாக காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் தேசத் தந்தையின் பெயரும் தவறாக எழுதப்பட்டிருந்தது சோகத்தை வரவழைத்தது.
ஆனால் அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி, எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்ளிட்ட யாரும் இதுபற்றி கண்டுகொள்ளாமல், குழு புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினர்..