இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஈரான் 180க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளைச் செலுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் முழுமையாக தொடங்கிவிட்ட நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகரில் கொல்லப்பட்டார். ஹமாஸுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
ஈரானின் ஆதரவுடன் வலிமையாக இருந்த ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா உட்பட அனைத்து இராணுவத் தளபதிகளையும் இஸ்ரேல் வேட்டையாடியது. மேலும், லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் தொடங்கியது.
இந்நிலையில் தான், இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்தி இருக்கிறது. ஈரானின் உச்ச தலைவரின் நேரடி கட்டளையின் கீழ் இயங்கும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை,செலுத்திய 90 சதவீத ஏவுகணைகள் திட்டமிட்ட இஸ்ரேல் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக கூறியுள்ளது.
மேலும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணைத் தளபதி அப்பாஸ் நில்ஃபோருஷன் ஆகியோரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர் ஜெனரல் முகமது பாகேரி, இஸ்ரேலின் ராணுவத் தளங்களையும், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தையும் குறிவைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பெரும்பாலான ஈரானின் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்காக, சுமார் 12க்கும் மேற்பட்ட இடைமறிப்பு கருவிகளை ஏவியதாக அமெரிக்காவின் பென்டகன் அறிவித்துள்ளது.
ஈரானின் தோற்கடிக்கப்பட்ட மற்றும் பயனற்ற தாக்குதல் என்று கூறியுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், மேலும், இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோவில் பாலஸ்தீனியர் ஒருவர் ஈரானின் ஏவுகணை தாக்குதலால் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு ஒத்தழைப்பு கொடுக்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மிகப் பெரிய தவறை, ஈரான் செய்துவிட்டதாகவும்,விரைவில் அதற்கான பலனைப் பெற்றே தீரும் என்றுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
அப்பாவி இஸ்ரேல் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஈரானின் இந்த தாக்குதலை முற்றிலும் கண்டிப்பதாக கூறியுள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேலுடன் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்களுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் மீது தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்கவும், ஈரானின் தொடர்ச்சியான மீறல்களைத் தடுக்கவும் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் ஐநா சபைக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,இஸ்ரேல் இராணுவத் தலைவர் ,மொசாத் தலைவர் தளபதி உள்ளிட்டோரை தீவிரவாதிகள் என பட்டியலிட்டு ஈரான் உளவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தலைவர்களைக் கொல்வது உறுதி என்றும் ஈரான் உளவுத்துறை கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.
அதே நேரத்தில், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் அணி திரளும் நிலையில், எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர்ந்தால், மூன்றாம் உலக யுத்தம் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகிறார்கள்.