எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 தமிழக மீனவர்கள் கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இலங்கை நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை மீட்டுக் கொண்டுவரக்கோரி அவர்களின் குடும்பத்தார் மற்றும் சக மீனவ மக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், மாநில அரசு சார்ப்பில் மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம், மீனவர்களின் 3 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி தீர்ப்பு வழங்கியதுடன், கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது