மார்த்தாண்டத்தில் மேம்பால பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வியெழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலத்தை முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே குண்டும், குழியும் ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் மேம்பாலத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மேம்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மேம்பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யவும், சீரமைப்பு பணிகள் முடியும் வரை போக்குவரத்தை தடை செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் மேம்பால பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதியளித்ததைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.