ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதில் ஐந்து தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு எலி காய்ச்சலும், ஒருவருக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக எலிக் காய்ச்சலால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவரும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் மூலம் ஈரோட்டில் எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.