தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும், பிரம்பு பொருட்கள் தயாரிக்கும் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
என்னதான், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், மூங்கில்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் மீதான ஈர்ப்பும், தேவையும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எவ்வித செயற்கை பொருட்களும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் மூங்கிலை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் பிரம்பு பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய பிரம்பு பொருட்களின் தயாரிப்புகளுக்கென்றே தனிப்பெயர் பெற்று விளங்குகிறது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள். இங்குள்ள 500 மேற்பட்ட குடும்பங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிலில் கோலோச்சி வருகின்றன.
கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள், அலங்கார கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரம்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த பகுதிகளில் அண்மைக்காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிவை சந்தித்து வருகிறது. முன்பெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காடுகளில் இருந்து பிரம்புகளை எடுத்து வந்து, வீட்டு உபயோக பொருட்கள் உருவாக்கப்படும்.
ஆனால் , தற்போது காடுகளில் இருந்து மூங்கில் பிரம்புகளை வெட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், அசாம் மாநிலத்தில் இருந்தும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மூங்கில்களை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கிலை இறக்குமதி செய்வதற்கே அதிக தொகை செலவாவதால், பிரம்பு பொருட்களின் விலையிலும் அது எதிரொலிக்கிறது…
தேன்பொத்தை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் பிரம்பு பொருட்கள் தரமானவையாகவும், பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்..
எனவே, வனத்துறை விதித்துள்ள தடையை நீக்கி இங்குள்ள காடுகளிலேயே பிரம்புகளை வெட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இதன்மூலம் பிரம்பு பொருட்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். மூங்கில்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெறும் அலங்காரத்திற்கானவை மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நியாயமான பிரம்பு பொருட்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.