ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டு, நாட்ராபாளையம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 7000 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இன்று 17 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.