கொல்கத்தா மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர்தான், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 8-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ விசாரித்தது.
இந்த நிலையில், கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் 45 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதில், 200 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர்தான் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.