ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களான நயப் சிங் சயனி, பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், முதலமைச்சருமான நயாப் சிங் சயனி லட்வா தொகுதியில் போட்டியிட்ட நிலையில், 70 ஆயிரத்து 177 வாக்குகள் பெற்று, 16 ஆயிரத்து 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான மேவா சிங் 54 ஆயிரத்து 123 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளருமான பூபிந்தர் சிங் ஹூடா, கர்ஹி சாம்ப்லா- கிலோய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 39 வாக்குகள் பெற்ற நிலையில், எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு37 ஆயிரத்து 74 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில் 65 ஆயிரத்து 80 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் வினேஷ் போகத் முன்னிலை பெற்ற நிலையில், சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரும் முன்னிலைக்கு வந்ததால் கடும் போட்டி நிலவியது. முடிவில் 6 ஆயிரத்து 15 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான ஹிசார் தொகுதியில், சுயேட்சை வேட்பாளரான சாவித்ரி ஜிண்டால் 49 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடம் கிடைத்தது.
ஹரியானாவின் முன்னாள் துணை முதலமைச்சரும், ஜனநாயக ஜனதா கட்சி தலைவருமான துஷ்யந்த் சிங் சவுதாலா படுதோல்வியை சந்தித்தார். உச்சன கலன் தொகுதியில் போட்டியிட்ட இவர், 5-வது இடத்தை பிடித்தது அக்கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.