தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 735 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தின் அருகில் உள்ள மரங்களில் தேனீக்கள் அதிகம் இருந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி இடைவேளை நேரத்தில், பள்ளி அருகில் இருந்த தேனீக்கள் மீது யாரோ கல்லெறிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் திடீரென தேனீக்கள் பள்ளி வளாகத்தில் இருந்த மாணவ மாணவிகளை கடித்தது. இதனால் வலி தாங்காமல் கதறிய, சுமார் 50 மாணவ மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி நேரில் சென்று நலம் விசாரித்தார்.